தமிழர் பிரச்சினைக்கு ஜெனீவா கூட்டத்தொடர் மூலம் சாதிக்கலாம் என்று கூறியவர்கள் இன்று ஜெனீவா தம்மை ஏமாற்றி விட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்தின் உப அலுவலகத்தில் இன்றைய தினம் (9) இடம்பெற்ற நிலையப் பணியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் பிரச்சினை தொடர்பில் உரிய தீர்வு காண்பதற்கு ஜெனீவா கூட்டத்தொடரே சிறந்தது என்றும் அதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமென்றும் கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று ஜெனீவா தம்மை ஏமாற்றி விட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களது பிரச்சினையை தீராப்பிரச்சினையாக வைத்துக் கொண்டு அதன் மூலம் தமது அரசியலை தொடர்வதே அவர்களது நோக்கமாகும்.
முன்னர் அபிவிருத்தியல்ல உரிமையே முக்கியம் என்றவர்கள் தற்போது அபிவிருத்தியின் முக்கியத்துவம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகின்றார்கள் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதனிடையே இ.போ.ச வடபிராந்திய போக்குவரத்து சபையின் தொழிற் சங்க நடவடிக்கைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள், அது எமது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அதேசமயம், அதன் மூலம் உரிய தீர்வினைக் காணவும் முடியாது என்றும் தெரிவித்தார்.
உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதே எமது நோக்கம் என்பதுடன் மக்களுக்கான சேவையை நீங்கள் சிறப்பாக முன்னெடுக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி மக்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களுக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமெனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதனிடையே யாழ்.சாலைக்கான வருவாயை பெருக்கி, நிதி வசதியை மேம்படுத்தி முன்னேற்றும் வகையில் யாழ்.சாலையினை அதன் சாலை முகாமையாளரிடம் தற்காலிகமாக ஒப்படைக்குமாறு இ.போ.சவின் வடபிராந்திய பிரதான பொது முகாமையாளர் அஸ்ஹரிடம் ஏற்கனவே பணிப்புரை விடுத்த அமைச்சர் அவர்கள், அந்த நடவடிக்கையினை இன்றைய தினமே ஆரம்பிக்குமாறும் கேட்டுக் கொண்ட அதேவேளை, இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் இதைத் தொடர முடியுமெனவும் தெரிவித்தார்.
இதற்கு எல்லோரும் ஒத்துழைப்பும், ஒத்தாசையும் வழங்கவேண்டுமென்பதுடன் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட அதேவேளை, மத்திய பேருந்து நிலைய சுற்றுமதில் அமைப்பது, மலசலகூடங்கள் கழிவுநீர் வாய்க்கால்களின் புனரமைப்பு, மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் நடமாடும் வியாபார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது, தனியார் பேருந்து நடத்துனர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தமது கடமைகளை முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் அவர்கள் அவதானம் செலுத்தினார்.
இதன்போது சாலை முகாமையாளர் குலபாலச்செல்வம், மத்திய பேருந்து நிலையத்தின் பொறுப்பதிகாரி மரியவிமல்ராஜ் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.
0 Response to "இ.போ.ச யாழ்.சாலையின் மேம்பாட்டிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை"
Post a Comment