Latest Updates

Categories Post

தமிழ்நாடு முதலமைச்சரது வரலாற்று முக்கியத்துவம் கொண்ட முடிவுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது!



தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் இரண்டு வரலாற்று
முக்கியத்துவம் மிகுந்த முடிவுகளை அண்மையில் எடுத்துள்ளார் . இம் முடிவுகள் குறித்து முதலமைச்சர் அவர்களைப் பாராட்டி வாழ்த்துவதோடு ஈழத் தமிழ் மக்கள் நலனில் முதலமைச்சர் அவர்கள் கொண்டிருக்கும் மிகுந்த பற்றுறுதி குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவருக்குத் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் வி . உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் .

மேலும் அண்மையில் தனது 66 வது அகவையினை நிறைவு செய்த முதல்வர் அவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதிலும் நாம் மகிழ்வடைவதாக வி . உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் .

அறிக்கையின் முழுவிபரம் :

தமிழக முதலமைச்சர் அவர்கள் எடுத்துள்ள முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனையும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு 23 வருட காலமாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் முருகன் , சாந்தன் , பேரறிவாளன் , நளினி , ரவிச்சந்திரன் , ரொபேர்ட் பயஸ் , ஜெயக்குமார் ஆகிய 7 தமிழர்களை விடுதலை செய்வது என்ற தமிழ்நாடு அரசின் முடிவு அமைகிறது . முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் எடுத்திருக்கும் இம் முடிவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது .

இவர்களில் முருகன் , சாந்தன் , பேரறிவாளன் ஆகியோர் மீது விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையினை சென்னை உச்ச நீதிதிமன்றம் ஆயுள்தண்டனையாகக் குறைத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது . உச்ச நீதிமன்றத்தினது இத் தீர்ப்பும் பாராட்டுக்கும் வர N வுற்புக்கும் உரியதாகும் .

நீதித்துறை நியமங்களின்படி எந்தவொரு வழக்கின் போதும் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பதனை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் வழக்கின் நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் . நீதித்துறையானது அரசியல்மயப்படுவதைத் தவிர்ப்பது ஜனநாயக ஆட்சி முறையில் மிகவும் அடிப்படையான தார்மீக நெறிமுறையாகும் . ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணைகள் நடைபெற்ற பொறிமுறையும் தீர்ப்புகள் வழங்கப்பட்ட நடைமுறையும் மிகுந்த அரசியல்சுமையொன்றினை சுமந்தவாறே நடந்து முடிந்திருக்கின்றன என்பதனை எவரும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும் . இது இந்திய ஜனநாயக விழுமியங்களுக்குப் பெருமை தரும் விடயமல்ல என்பதனை புரிந்து கொள்வதும் கடினமானதொன்றல்ல .

இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் 23 வருடங்கள் சிறைக்குள் வாடி வரும் நிலையில் அவர்களை விடுதலை செய்வதெனத் தமிழ்நாடு அரசாங்கம் எடுத்த முடிவு நீதியின்பாற்பட்டது . தர்மம் நிறைந்தது . இம் முடிவினை இந்திய மத்திய அரசாங்கம் எதிர்த்து நீதிமன்றம் செல்ல எடுத்த முடிவு எமக்கு வேதனை தருகிறது . இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனத் தமிழக முதலமைச்சர் துணிவாகத் தெரிவித்திருப்பது எம் மக்களுக்கு புதிய தெம்பையும் உற்சாகத்தையும் அளிக்கிறது .

இவ் விடத்தில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு ஒரு வேண்டுகோளை நாம் முன்வைக்க விரும்புகிறோம் . 2009 இல் சிறிலங்கா அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் மேற்கொண்ட தமிழின அழிப்பினை இந்திய அரசாங்கம் ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பழிவாங்கும் முகமாக மௌனமாகவிருந்து அங்கீகரித்ததாக நமது மக்கள் பலர் கருதுகிறார்கள் .

அரசியல் நாகரீகம் கருதியும் நட்புறவு சார்ந்த அக்கறை கருதியும் நாம் பல விடயங்களைப் பகிரங்கமாகப் பேசாது விடினும் உண்மையில் நடந்த விடயங்களை வரலாற்றின் கண்களில் இருந்து நாம் மறைக்க முடியாது . வன்னியில் இறுதிப்போர் நடந்த காலங்களில் இந்திய மத்திய அரசாங்கத்தினதும் அப்போதய தமிழ்நாடு மாநில அரசாங்கத்தினதும் நிலைப்பாடும் செயற்பாடுகளும் நமது மக்களின் மனங்களில் மிகுந்த வேதனையினை ஏற்படுத்தியிருந்தன .

இப்போதும் நம்மவர் பலரது மனங்களில் ஆறாத இரணமாக இவை இருப்பது தான் உண்மை . தமிழர்கள் மனங்களில் , ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மனங்களில ; ஏற்பட்டிருக்கும் இந்த இரணத்தினை ஆற்றும் பொறுப்பும் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு இருக்கிறது . இத்தகையதொரு சூழலில் தமிழ்நாடு அரசாங்கம் இந்த 7 பேரது விடுதலை தொடர்பாக எடுத்துள்ள முடிவினை இந்திய மத்திய அரசாங்கம் எதிர்க்காது விடுவது நமது மக்களுக்கு ஆறுதல் தரும் விடயமாக இருக்கும் என்பதனை வெளிப்படுத்த விரும்புகிறோம் .

தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழகத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது முடிவாக அமைகிறது . முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழகம் அளித்துள்ள கீழ்வரும் தேர்தல் வாக்குறுதி நமது மக்களுக்கு பெரும் நம்பிக்கையினை முதல்வர் அவர்கள் மீது ஏற்படுத்தியுள்ளது .

« இலங்கை உள்நாட்டுப் போரின் போது , சர்வதேச விதிகளை மீறி போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை , இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும் , இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. சபையை வலியுறுத்தவும் அதிமுக உறுதி ஏற்றுள்ளது .

மேலும் , தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு இடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி செய்யப்படும் . »

எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இத்தகைய வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குமாறு வேண்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவைத் தீர்மானமொன்றை நிறைவேற்றி இது குறித்த ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் நாம் சென்னையில் கூட்டியிருந்தோம் .

இந் நிலையில் வெளிவந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழகத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ் விடயங்கள் உள்ளடக்கப்பட்டமை நமக்குப் பெரும் மகிழ்வைத் தருகிறது . தமிழகத்தின் ஏனைய கட்சிகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ் விடயங்களை உள்ளடக்குவார்கள் என நம்புகிறோம் .

நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக இலங்கைத்தீவு தொடர்பான இந்திய மத்திய அரசின் கொள்கைகளில் தமிழ் மக்களுக்குச் சார்பான மாற்றத்தை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் அவர்களும் ஏனைய கட்சித் தலைவர்களும் உறுதியாகச் செயற்படுவார்கள் என்பது எமது நம்பிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளதென்பதை இவ்விடத்தில் தெளிவு படுத்த விரும்புகிறோம் .

இவ்வாறு பிரதமர் வி . உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

0 Response to "தமிழ்நாடு முதலமைச்சரது வரலாற்று முக்கியத்துவம் கொண்ட முடிவுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது!"

Post a Comment