Latest Updates

Categories Post

தேசத்தின் மகுடத்தில் தமிழுக்கு மகுடம் சேர்த்த முஸ்லிம் இளைஞன்!

 ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினரால் தமிழுக்கு சம உரிமை வழங்கப்படுகின்றமையை குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்று நிறைவடைந்த தேசத்தின் மகுடம் கண்காட்சியில் நேரில் அவதானிக்க முடிந்தது.

ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க செயலகத்தின் கலை நிகழ்ச்சிகளில் தமிழ் மொழி மூல அறிவிப்பும் கட்டாயம் இடம்பெற்றே ஆக வேண்டும் என்பதில் பற்றுறுதியாக காணப்பட்டார்.

தமிழ் மொழி மூல அறிவிப்பை வளர்ந்து வருகின்ற இளைய அறிவிப்பாளர் பரீட் இஸ்பான் மிக அற்புதமாக மேற்கொண்டார்.

பரீட் இஸ்பான் வவுனியாவில் சின்னச்சிப்பிக்குளம் என்கிற கிராமத்தை சொந்த இடமாக கொண்டவர். ஆரம்ப கல்வியை தாருல் உலும் முஸ்லிம் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை வவுனியா அல் ஹாமியா மகா வித்தியாலயத்திலும் பயின்றார். தற்போது கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கல்லூரியில் தகவல் தொழிநுட்பம் தொடர்பான பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகின்றார்.

அறிவிப்புத் துறை மீது இவருக்கு இயல்பாகவே ஈடுபாடு. நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக இத்திறமையை வளப்படுத்தியும், வளர்த்தும் வருகின்றார். இவரது திறமையை அடையாளம் கண்டு மிக சரியான களத்தை அமைத்துக் கொடுத்த பெருமையும் ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவையே சேரும்.

பாடசாலைக் காலம் தொட்டு அறிவிப்புத் துறையில் பல களங்களை கண்டு வந்திருக்கின்ற இவரின் திறமையை ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சிசுதிரிய வேலைத் திட்டம் 2011 ஆம் ஆண்டு பட்டை தீட்டியது. தேசத்தின் மகுடம் உண்மையிலேயே இவருக்கு மகுடம் சேர்த்தது.

கணீர் என்கிற குரல், மடை திறந்த வெள்ளம் போன்ற தமிழ், மேடைக் கூச்சம் இல்லாத கம்பீரம் ஆகியன இவர் சிறந்த அறிவிப்பாளராக மிளிர்வார் என்பதை கட்டியம் கூறி நிற்கின்றன.


0 Response to "தேசத்தின் மகுடத்தில் தமிழுக்கு மகுடம் சேர்த்த முஸ்லிம் இளைஞன்!"

Post a Comment