Latest Updates

Categories Post

முல்லைத்தீவு பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் புலிகளால் புதைக்கப்பட்டவையே. அடித்துக் கூறினார் அஜித் ரோஹண.

முல்லைத்தீவு மூங்கிலாறு வடக்குப் பகுதியில் முல்லைத் தீவு பொலிஸாரினால் மீட்கப்பட்ட
9 மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அம்மனிதப் புதைக்குழி தொடர்பில் ஒருவரின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார் .

பொலிஸ் விஷேட அதிரடிப்படை தலைமையகத்தில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் .

இதன் போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது ,

மன்னார் , முல்லைத்தீவு பகுதிகளில் மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன .

இந் நிலையில் கடந்த வெள்ளியன்று முல்லைதீவில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் யாழ் சட்ட வைத்திய அதிகாரி , முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அப்பிரதேசத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார் .

கோபால் கேதீஸ்வரன் என்ற குறித்த நபர் வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி அளவில் இந்த சடலங்கள் புதைக்கப்பட்டதாகவும் , புலிகள் கொலை செய்து ட்ரக்டர் ஒன்றில் கொண்டுவந்த சடலங்களே இவ்வாறு புதைக்கப்பட்டதாகவும் புலிகளின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய குணராஜ் என்பவர் அப்போது அது தொடர்பில் தமக்கு அறிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் .

இந் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்ப கட்ட விசாரணைகளில் முல்லைத்தீவு மூங்கிலாறு வடக்குப் பகுதியில் முல்லைத்தீவு பொலிஸாரினால் மீட்கப்பட்ட 9 மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எச்சங்கள் புலிகளால் செய்யப்பட்ட கொலையின் பின்னர் புதைக்கப்பட்ட சடலங்கள் என தெரியவந்துள்ளது .

எவ்வாறாயினும் குணராஜ் என்ற புலிகளின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றியதாக கூறப்படும் நபரை பொலிஸார் தேடி வருவதாகவும் அவரிடம் வாக்கு மூலம் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார் .

இதேவேளை மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி தொடர்பில் விஷேட தீர்மானம் ஒன்று எதிர்வரும் 5 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது .

மன்னார் நீதிவான் நீதிமன்றின் நீதிபதி அனந்தி கனகரட்னம் , குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் , தொல் பொருள் ஆய்வு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் . குறித்த கலந்துரையாடலின் பின்னர் அந்த மனிதப் புதைக்குழியை தொடர்ந்து தோண்டுவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படவுள்ளது .

குறித்த இடத்தில் ஏதேனும் மயானங்கள் இருந்தனவா என்பது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது . குறித்த பகுதியில் 1950 ஆம் ஆண்டு போடப்பட்டதாக கூறப்படும் பாதையின் கீழாலும் இந்த எலும்புக்கூடுகள் காணப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது . எனவே அது தொடர்பில் 5 ஆம் திகதி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது . என தெரிவித்தார் .

0 Response to "முல்லைத்தீவு பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் புலிகளால் புதைக்கப்பட்டவையே. அடித்துக் கூறினார் அஜித் ரோஹண."

Post a Comment