Latest Updates

Categories Post

அச்சுவேலி சந்தையில் வசதிகள் இல்லை. வலி. கிழக்கு பிரதேச சபை மீது குற்றச்சாட்டு.

அச்சுவேலி பொதுச் சந்தையில் அடிப்படை வசதிகள் இன்மையால் சந்தை வியாபாரிகளும் பொது
மக்களும் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்ற பிரதேச மக்கள் இந்த விடயங்கள் தொடர்பாக வலி . கிழக்குப் பிரதேச சபை நிர்வாகம் பொருத்தமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர் .

வலி . கிழக்குப் பிரதேச சபைக்கு ஆகக்கூடுதலான வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கின்ற இச் சந்தையில்குடிநீர் வசதி , மலசல கூட வசதி , கழிவுகளை அகற்றும் செயற்பாடு போன்றன உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லைஎனவும் சந்தையில் மேற்கொள்ளப்படுகின்ற வரி அறவீடுகள் தொடர்பான விபரங்களும் வெளிப்படுத்தப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் .

பொதுச் சந்தை வளாகத்தில் இரண்டு கிணறுகள் அமைந்துள்ள போதிலும் அவை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை எனவும் கிணறுகள் மூடப்படாமல் திறந்த நிலையில் இருப்பதால் சந்தையில் வீசப்படும் கழிவுகளால் நீர் மாசுபடுத்தப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது . குடிநீர் வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படவில்லை .

சந்தையில் அமைந்துள்ள பொது மலசல கூடங்கள் பொருத்தமான முறையில் சீர் செய்யப்படாமல் இருப்பதோடு அவற்றுக்கான நீர் விநியோகமும் உரிய முறையில் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேட்டினால் துர்நாற்றம் வீசுகின்றது .

சந்தைக் கழிவுகளை அகற்றும் செயற்பாடும் ஒழுங்கமைக்கப்பட்ட நேர ஒழுங்கில் பொதுச் சந்தைகளில் மேற்கொள்ளவேண்டிய நிபந்தனையின் பிரகாரம் மேற்கொள்ளப்படாமல் இருப்பதோடு சந்தையில் வர்த்தக நடவடிக்கைகள் நடைபெறும் வேளையில் மேற்கொள்ளப்படுவதால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் மரக்கறி மற்றும் உணவுப்பொருட்களில் சுகாதார குறைபாடுகள் ஏற்படுகின்றன .

கடந்த காலங்களில் சந்தைப்பகுதியின் சுகாதார மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகரினால் கண்காணிக்கப்பட்டு வந்தது . தற்பொழுது பொதுச் சுகாதார பரிசோதகருக்குப் பதிலாக பிரதேச சபை ஊழியர்கள் மேற்பர்வை செய்வதால் பொதுச் சுகாதாரபரிசோதரின் நடமாட்டமே இல்லை எனவும் அச்சுவேலி பொதுச் சந்தையின் பொதுச் சுகாதார நடவடிக்கையை இயல்பு நிலையில் பேணுவதற்கு கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் பொருத்தமான ஏற்பாட்டைச் செய்யவில்லை எனத் தெரிவிக்கின்றனர் . வரி அறவீடுகளும் பொருத்தமான முறையில் அறிவிப்பதில்லை எனவும் முறையிடப்பட்டுள்ளது .

யாழ் நிருபர் .

0 Response to "அச்சுவேலி சந்தையில் வசதிகள் இல்லை. வலி. கிழக்கு பிரதேச சபை மீது குற்றச்சாட்டு."

Post a Comment