
இலங்கையில் அதிகாரபூர்வமாகத் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி தொழில் முறைகளை
பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் யாழ் மீனவர்கள் கைவிடவேண்டுமென யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை கெடு விதித்திருக்கிறார் .
இலங்கையில் அதிகாரபூர்வமாகத் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி தொழில் முறைகளை இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறிப் பிரவேசித்துப் பயன்படுத்துவதனால் , இருநாட்டு மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் இன்றைய காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது .
பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் தடைசெய்யப்பட்டுள்ள தொழில் முறைகளை மீனவர்கள் கைவிட வேண்டும் . அவ்வாறு கைவிடாவிட்டால் , கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் , காவல்துறையினர் , கடற்படையினர் ஆகியோரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு எதிராகக்கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார் .
" ட்ரோலிங் தொழில் , தங்கூசி வலை , சுருக்கு வலைகளைப் பயன்படுத்துதல் , குழைபோட்டு கணவாய் பிடித்தல் , வெடிபோட்டு மீன்பிடித்தல் , கம்பியால் குத்தி மீன்பிடித்தல் போன்ற தொழில் முறைகள் இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டிருக்கின்றன . ஆனாலும் இவற்றை , பல மீனவர்கள் பயன்படுத்துகின்றார்கள் . எனவே தான் அவற்றைக் கைவிட்டு ஏனைய தொழில் முறைகளைப் பயன்படுத்துமாறு கோரியிருக்கின்றோம் " என்றார் எமிலியான்பிள்ளை .
இலங்கை மீனவர்களுக்கு மட்டுமே , இந்த எச்சரிக்கை செய்யப்பட்டிருப்பதாகக் கூறிய அவர் , இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கக் கூடாது என்பதே தமது கோரிக்கை என்றும் குறிப்பிட்டார் .
இதனிடையே , ஜனவரி மாதம் 9 ஆம் தேதி இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளையின் தலைமையிலான மீனவர் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணை தூதரக அதிகாரிகளிடம் மகஜர் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது .
" அண்மையில் செய்து கொள்ளப்பட்டுள்ள இலங்கை இந்திய மீனவர்களின் ஒப்பந்தத்தில் , கைது செய்யப்படுகின்ற இருநாட்டு மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது . ஆனால் எமது மீனவர்கள் கைது செய்யபட்டு பல வாரங்கள் ஆகிவிட்ட போதிலும் இந்திய அதிகாரிகளினால் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை . இதனால்தான் நாங்கள் எமது மீனவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மகஜர் கையளித்திருக்கின்றோம் " என தெரிவித்தார் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை .
0 Response to "தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்குத் தடை."
Post a Comment