Categories Post
புலனாய்வு அதிகாரி தனிப்பட்ட குடும்ப தகராறினால் தற்கொலை!
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் புலனாய்வு பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமரக்கோன் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குடும்பத்தகராறு காரணமாக அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
அத்துருகிரிய, கொடகம பிரதேசத்திலுள்ள வயல்வெளி பகுதியில் இருந்து பொதுமக்களின் தகவலையடுத்து பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலம் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமரக்கோன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தலையின் வலது புறத்தில் துப்பாக்கிச் சூட்டு காயம் காணப்பட்ட நிலையில் மீட்டெடுக்கப்பட்ட சடலத்திற்கு அருகில் இருந்து பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை என்பன விழுந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கொலையா, தற்கொலையா என்ற விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் சட்டைப்பையில் இருந்து அவரது மனைவியினால் எழுதப்பட்டுள்ள கடிதம் ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர்.
அதன் பிரகாரம் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ள குடும்பத்தகராறு காரணமாக ஆத்திரமுற்ற அதிகாரி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டியிலுள்ள கலகத் தடுப்பு பொலிஸாரின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளதாவது,
கம்பளை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் நுகேகொட பிரதேசத்தில் திருமணம் முடித்தவராவார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், 1989ம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டராக பொலிஸில் இணைந்துள்ளார்.
பொலன்னறுவை, இங்கிரிய, கிருபலப்பணை, வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களில் கடமையாற்றிய இவர் 2005ம் ஆண்டு புலனாய்வு பிரிவில் இணைந்து யுத்தத்தின் இறுதி காலகட்டத்தில் புலனாய்வு துறையில் சிறந்த சேவைகளை புரிந்துள்ளார்.
இந் நிலையில் இவரது சம்பவத்தை சில ஊடகங்கள் புலனாய்வு அதிகாரி என்பதால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், இதில் எந்தவித உண்மையும் கிடையாது. இந்த சம்பவத்திற்கும் புலனாய்வு நடவடிக்கைக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று தெரிவித்ததுடன், தனிப்பட்ட குடும்ப தகராறு காரணமாக என்று தெரியவந்துள்ளது என்றார்.
வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு பிறகு கடந்த மாதம் வரை தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கும் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றி வந்த இவர் கடந்த மாதம் முதல் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
இதனால், இவரது அலுவலக பிஸ்டலை தெஹிவளை பொலிஸ் பாதுகாப்பு அறையிலேயே வைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வரை கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் வழக்கம் போன்று கடமையில் ஈடுபட்டுவந்த அவர் தனது வீட்டுக்கு சென்றுவிட்டு பின்னர் தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் நேற்று முன்தினம் மாலை 5.50 மணியளவில் தனது உத்தியோகபூர்வ பிஸ்டலை கடமை நிமித்தம் பெற்றுக் கொள்வதாக கூறி எடுத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலைய பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது. அந்தத் துப்பாக்கி எடுத்து வீட்டுக்குச் சென்றுள்ள அவரே நேற்றுக்காலை சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் நுகேகொட பதில் நீதவான் சூரியப்பெரும களுபோவில வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி எச். கே. ஆர். சஞ்சீவ ஆகியோர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
தலையின் வலதுபுறமாக துளைத்துச் சென்ற குண்டு இடதுபுறமாக வெளியேறியமையினால் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் மரணம் சம்பவித்ததாக சட்ட மருத்துவ அதிகாரி எச்.கே.ஆர்.சஞ்சீவ உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும், பிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர், அதன் பின்னரே மரணத்திற்கு உறுதியான காரணத்தை கூற முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஹோமக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
Posted by kesa
on Sunday, February 16, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "புலனாய்வு அதிகாரி தனிப்பட்ட குடும்ப தகராறினால் தற்கொலை! "
Post a Comment