சென்னை அருகே, கம்ப்யூட்டர் நிறுவன பெண் என்ஜினீயர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில், கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணியாற்றும், பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.பொதுவாக கம்ப்யூட்டர் நிறுவனங்களில் இரவு பணி செய்து விட்டு, வீடு திரும்பும் பெண்களுக்கு, போதுமான பாதுகாப்பு இருப்பதில்லை. அவர்கள் வீடு திரும்பும் வழியில் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. பெங்களூர், டெல்லியில் இதுபோல் பணிமுடிந்து வீடு திரும்பிய பெண் என்ஜினீயர்கள் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர்.
தற்போது சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சிறுசேரியில், உமாமகேஸ்வரி என்ற பெண் என்ஜினீயரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து சென்னையில், கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டெல்லி, பெங்களூரில் கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தவுடன், சென்னையில் இரவுப்பணி செய்துவிட்டு, வீடு திரும்பும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக கம்ப்யூட்டர் நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் வாசல், வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் கேமரா பொருத்த வேண்டும்.
இரவில் பணி முடிந்து வீடு திரும்பும், பெண் ஊழியர்களை உரிய வாகனத்தில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அனுப்ப வேண்டும். பெண் ஊழியர்களை அழைத்து செல்லும் வாகன டிரைவருக்கு உரிய அடையாள அட்டை கொடுக்க வேண்டும். டிரைவர் நேர்மையானவரா? என்பது தொடர்பாக போலீஸ் மூலம் விசாரித்து, அதன் பிறகே பணி அமர்த்திட வேண்டும்.
பெண் ஊழியர்கள், பணி முடித்து விட்டு, வீடு திரும்பும் வரை, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களே பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர், தற்போது மீண்டும், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட, கம்ப்யூட்டர் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் காணாமல் போனதாக கொடுக்கப்படும் புகார்கள் மீது, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
0 Response to "இரவில் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் கமிஷனர் உத்தரவு"
Post a Comment