கிளிநொச்சி - கொழும்பு ரயிலில் வடபகுதி பயணிகள் இயல்பு நிலையில் பயணம் செய்ய
முடியாத நிலையே உள்ளது . வடபகுதியைச் சேர்ந்த அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் ரயில் ஆணைச் சீட்டு வசதியைக் கூட உரிய சலுகைகளுடன் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர் .
அவர்கள் கால்கடுக்க நின்ற நிலையிலேயே ரயில் பயணத்தைத் தொடர வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் . கடந்த முப்பது வருடங்களுக்குப் பின்னர் வடபகுதிக்கான ரயில் சேவை சீர் செய்யப்பட்டு கிளிநொச்சி வரை நடைபெற்று வருகின்றது . கூடிய விரைவில் கொடிகாமம் வரை விஸ்தரிக்கப்படுவதோடு தமிழ் - சிங்கள புத்தாண்டோடு யாழ்ப்பாணம் வரையில் ரயில் சேவையை விஸ்தரிப்பதற்கு வசதியாக ரயில்பாதை நிர்மாண மற்றும் ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன .
கிளிநொச்சி வரையில் நடை பெறும் ரயில் சேவையில் வட பகுதி பயணிகள் இயல்பு நிலையில் பயணம் செய்ய முடியாமல் பல்வேறு நெருக்கடிகள் சிரமங்களுக்கு மத்தியிலேயே பயணம் செய்கின்றனர் . பெருமளவில் பாதுகாப்புத் தரப்பினரும் தென்னிலங்கையில் இருந்து வந்து திரும்பும் பயணிகளுமே ரயில் பயணத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய சௌகரியங்களை உரிய முறையில் பயன்படுத்துகின்றனர் .
யாழ் . மாவட்டத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு ரயில் பயணம் தொடர்பான அனுபவம் முற்றாக இல்லாமல் இருப்பதோடு கிடைக்கின்ற முதல் அனுபவமும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இயல்பு நிலையில் இல்லாமலும் போய்விடுகின்றது . அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வருடத்துக்கு மூன்று சோடி ரயில் ஆணைச்சீட்டை தமது குடும்பத்தினர் அனைவரையும் உள்ளடக்கிய நிலையில் பெறமுடியும் .
அதேபோன்று ஓய்வுநிலையில் உள்ளவர்கள் வருடத்துக்கு ஒரு சோடி ரயில் ஆணைச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் . அரச ஊழியர் , ஆசிரியர்கள் தமது பதவி நிலை மற்றும் சம்பளத்தர நிலைக்கு ஏற்ப ரயில் ஆணைச் சீட்டைப் பயன் படுத்தி வகுப்பு ' உறங்கலிருக்கை ' படுக்கை ' வசதியை குளிரூட்டி வசதி நிலையில் குடும்பத்தோடு பயணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது . குறித்த வசதியைப்பயன்படுத்தி பயணம் செய்யவோ , அந்த வகையான வசதிகளை முன் கூட்டி பதிவு செய்துகொள்ளவோ முடியாத நிலை காணப்படுகின்றது . அவற்றை பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் தென்னிலங்கை பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வதோடு வசதியான முறையில் ஒதுக்கீடும் செய்யப்பட்டு விடுகின்றது .
வட பகுதியைச் சேர்ந்த பயணிகள் இந்த வசதியை கோரும் போது ' முடிவடைந்து விட்டது ' என்ற பதில் முன் கூட்டியே தயார் நிலையில் உள்ளது போல் கூறப்படுகின்றது . வடக்கின் வசந்தம் என்ற வகையில் வீசும் என எதிர்பார்த்திருந்த ரயில் பயணம் வடபகுதி தமிழர் தரப்புக்கு வாடையாகி துன்பம் தருவதாக கூறப்படுகின்றது .
கிளிநொச்சிக்குச் சென்று ரயில் மூலம் வசதியாக கொழும்புக்கு செல்லலாம் . கொழும்பில் இருந்து வட பகுதிக்கு வசதியாக திரும்பலாம் என்று நினைத்தவர்கள் போதும் இந்த துன்புறுத்தல் என்ற கையேறு நிலையில் ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவு செய்து வழமையான பஸ் பயணத்தையே தொடருவதாக விசனம் தெரிவிக்கின்றனர் .
வன்னி நிருபர் .
Categories Post
கிளிநொச்சி - கொழும்பு ரயிலில் வடபகுதி பயணிகளின் இயல்பு நிலை பாதிப்பு.
Posted by kesa
on Thursday, February 20, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "கிளிநொச்சி - கொழும்பு ரயிலில் வடபகுதி பயணிகளின் இயல்பு நிலை பாதிப்பு."
Post a Comment