Latest Updates

Categories Post

கிளிநொச்சியில் பல்கலை வளாகம் டக்ளஸ் சாதனை

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக வளாகத்தின் உருவாக்கத்தினூடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடபகுதி மக்களுக்கு ஒரு நிலையான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார் என வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கடந்த புதன் பெப்ரவரி 05ஆம் திகதி கிளிநொச்சி அறிவியல் நகரில் அமையப்பெற்றுள்ள விவசாய பொறியியல் பீடங்களுக்கான கட்டிடத்தொகுதிகளின் மீள் கட்டுமானப்பணிகளை அமைச்சர் பார்வையிட்டபின் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே வாழ்நாள் பேராசியரியர் பாலசுந்தரம்பிள்ளை கூறியிருக்கின்றார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை மத்திய அரசுடன் கொண்டிருக்கும் அணுகுமுறையூடாகவே இதையும் சாதிக்க முடிந்தது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

இதையும் சாதிக்க முடிந்தது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பதே ஏற்கெனவே, அபிவிருத்தி, வேலைவாய்ப்புகள், உட்கட்டுமானப் பணிகள் என்பவற்றில் சாதித்துக் காட்டியிருப்பதையும், தீர்வுத்திட்டம் உட்பட தமிழ் மக்களுக்கான தேவைகளை இணக்க அரசியல் ஊடாக பெற்றுக் கொள்ள முடியுமென்றும் கூறுவதாகவே உணர்த்துகின்றது.

சிங்கள அரசும், தற்போதைய ஆளுனரும் வடக்கு மாகாண சபையை செம்மையாக இயங்க விடுகின்றார்களில்லை என்றும்  தடைகளைப் போடுகின்றார்கள் என்றும், வட மாகாணத்திலுள்ள அரச அதிகாரிகள் ஒத்துழைப்பாக பணியாற்றுகின்றார்களில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் கடந்த நான்கு மாதமாக அழுது கொண்டிருக்கையில், அதே சிங்கள அரசையும், அதே ஆளுனரையும், அரச அதிகாரிகளையும் பக்குவமாகவும், அனுபவ முதிர்ச்சியுடனும் அணுகி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கே உரிய பாணியில் வேலைகளை முன் நகர்த்தி சாதிக்கின்றார்.

இவற்றுக்காக யாருக்கும் அடிமையாக இருப்பதுமில்லை, சலுகையாகப் பெறுவதுமில்லை. சாணக்கியமாக சாத்தியமான பாதையில் எமது வெற்றிகளுக்காக உழைப்பதுதான் இணக்க அரசியலுக்கான எனது வரைவிலக்கனமாகும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
அமைச்சர் இவ்வாறு கூறினாலும், முதலமைச்சரும், கூட்டமைப்பினரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு வேளை அமைச்சர் அரசின் பகையாளியானால் அமைச்சர் கூறும் இணக்க அரசியலுக்கு புதிதாய் ஒரு தெளிவுரை கொடுத்து அதற்குள் கூட்டமைப்பினரும், முதலமைச்சரும் ஹீரோக்களாகிவிடுவார்கள். தமிழ் ஊடகங்களும் அப்படியானதொரு சூழலில் இணக்க அரசியலுக்குள் பல தந்திரோபாயங்கள் இருப்பதைக் கண்டுபிடித்து முன்னுரிமை கொடுப்பார்கள்.

சுருக்கமாகக் கூறினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்தால் அது சும்மா இணக்க அரசியல், ஒன்றுமே செய்யாமல் வெறும் அறிக்கையும், அழுகையுமாக இருந்தால் அது தன்மானத் தமிழ்த் தேசியத்தின் வீரியமான அரசியல். இப்படித்தான் தமிழர் ஊடகங்களின் செயற்பாடுகள் இருக்கின்றன.

யார் எதைக் கூறினாலும், எத்தகை விமர்சனங்களைச் செய்தாலும் அமைச்சரின் சாதனைகளை தமிழ் மக்களின் வரலாற்றிலிருந்து அழிக்கமுடியாது என்பதை கிளிநொச்சியில் பொறியியல் பீடத்தையும், விவசாய பீடத்தையும் நிறுவுவதில் வரலாறுகள் கடந்த பாடத்தையும் அதை சாதித்த அமைச்சரின் சாதனையையும் விரிவாக முன்வைக்கும் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளையின் விரிவான தகவல்களை படிக்கும்போது புரிந்து கொள்ளமுடியும்.

பேராசிரியரின் உரையின் தொடர்ச்சியைப் பார்க்கலாம். 1980 ஆம் ஆண்டு கிளிநொச்சியிலே விவசாய பீடத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் காலத்தில் நேர்முப் பரீட்சைகளை நடாத்தி 1990 ஆம் ஆண்டு விவசாய பீடத்தை கிளிநொச்சியிலே ஆரம்பித்தோம். ஆனால், முதல் முதலாக நியமிக்கப்பட்ட பீடாதிபதி அப்பீடத்தை பொறுபேற்கும் முன்னதாகவே மரணித்து விட்டார். பின்னர் அடுத்ததாக நியமிக்கப்பட்ட பீடாதிபதி பீடத்தை பொறுப்பேற்றிருந்த நிலையில் மரணமாகிவிட்டார். அதன் பின்னரும் நாம் முயற்சியைக் கைவிடவில்லை. தொடர்ந்து ஐந்து வருடங்கள் இப் பீடத்தினை இயக்கிவந்தோம். ஆனால், அன்று விரிவுரையாளர்களாக கடமையாற்றிய ஐந்து பேரும் விவசாயத்துறையை சாராத விரிவுரையாளர்களாக இருந்தபோதும் விரிவுரைகளை சிறப்பாக மேற்கொண்டு வந்தார்கள் எனக் குறிப்பிட்ட அவர்

இவ்வாறு படிப்படியாக வளர்ச்சி கண்டுவந்த நிலையில் 1996 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் ஏற்பட்ட யுத்தத்துடன் விவசாய பீடத்தின் செயற்பாடுகள் யாவும் முடங்கிப்போனது. அதன் பின்னர் வசந்தி அரசரத்தினம் உள்ளிட்ட சிலர் மருத்துவ பீடத்தில் முக்கிய பதவி நிலையில் இருந்ததனால் அவர்களின் உதவியுடன் விவசாய பீடத்தை மருத்துவ பீடத்தின் ஒரு பகுதியில் வைத்து இயக்கி வந்தோம். பின் அயல் காணியில் மூன்று சிறிய கட்டடங்களை அமைத்து விவசாய பீடத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தோம். ஆனால், இன்று இப்பீடத்திற்கு மிகப்பெரும் வளாகம் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. பீடாதிபதி மிகுந்தன் மற்றும் சிவமதி ஆகியோர் மிகுந்த ஆவலுடன் இப்பீடங்களை வளப்படுத்தி வருகின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் 1978 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் விவசாய பீடத்தினை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் சிவப்பிரகாசப்பிள்ளை வைத்தியர் குமார்பேபி ஆகியோர் உட்பட்ட குழுவினர் கிளிநொச்சிக்கு வருகை தந்து காணிகளையும் பார்வையிட்டதோடு அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்கள்; இதேவேளை, 1978 ஆம் ஆண்டிலிருந்தே பொறியியல் பீடத்தையும் இங்கு கொண்டு வருவதற்காக பேராசிரியர் நித்தியானந்தன் அவர்களும் பின்னர் பேராசிரியர் துரைராஜா அவர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்கள். ஆனால், அம்முயற்சி கைக்கூடவில்லை என குறிப்பிட்ட பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை.

ஆயினும் 2002 ஆம் ஆண்டு நான் யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தான் கடமையாற்றிய காலப்பகுதியில் இப்பொறியியல் பீடத்தை கிளிநொச்சியில் இயக்குவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றபோதும் அதை ஆரம்பிப்பது தொடர்பான ஸ்திரமற்ற நிலைப்பாடுகள் காணப்பட்டதனால் அந்த சந்தர்ப்பமும் கைநழுவிப்போனதான தெரிவித்தரர் ஆனால் இன்று இவ்விரு பீடங்களையும் ஆரம்பிப்தற்கான சூழல் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினத்தின் காலத்தில் கைகூடியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம்; வடபகுதி மக்களுக்காக ஒரு நிலையான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு அவர் நிச்சயமாக அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதாக பல தடவைகள் கூறிவந்தார். அதாவது முன்னால் அமைச்சர் இராசதுரை அவர்கள் விபுலானந்தர் அக்கடமியை அமைத்தார.; அது இன்றும் புகழ்பெற்று விளங்குகின்றது. அவ்வாறான நிலையான செயற்திட்டமே எமது மக்களுக்கு நிலையான உயர்வைத்தரும் எனவும் நான் குறிப்பிட்டு வந்திருக்கிறேன். அதற்கமைவாக இவ்வளாகத்தின் உருவாக்கத்தினூடாக அவர் அச் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தியிருக்கின்றார் என்றே கருதமுடியும் எனதெரிவித்த அவர்.

இந்த பீடங்களுக்கான காணியைப்; பெறுவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மிக அதிகமாக முயற்சித்துள்ளார். கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரத்தின் திறப்பு விழாவின்போது பல்கலைக்கழகமாக உருவாக வேண்டும் என்ற நோக்கில் தெரிவு செய்யப்பட்ட இக்காணி தொடர்ந்தும் அதே நோக்கிற்காக பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையுடன் அவர் ஜனாதிபதியிடம் இக்காணியைப் பெறுவதற்கான கோரிக்கையை விடுத்தார், அமைச்சரின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்க முடியாத ஒரு நிலைப்பாட்டின் அடிப்படையிலும் ஜனாதிபதி அமைச்சரின் மீது கொண்டிருக்கும் பற்றின் பிரகாரமும் அக்காணியை பெற்றுத்தருவதற்கு மான்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஒப்புதலளித்தார் என சுட்டிக்காட்டினார்.

பொதுவாக இக்காணியைப் பெறுவதென்பதில் பல்வேறுபட்ட அழுத்தங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மிக நேர்த்தியான அரசியல் அணுகுமுறையினூடாக விலைமதிப்பற்ற சொத்தை இன்று யாழ்.பல்கலைக்கழகம் பெற்றிருக்கின்றது எனவும் குறிப்பிட்ட பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை

அமைச்சர் தொடர்ந்தும் இப்பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டுக்கு பங்காற்றத் தயாராகவே உள்ளார். அவ்வாறான பரந்த மனப்பாண்மை கொண்டவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள். அவர் இவ்விரு பீடங்களும் இங்கு இயங்குகின்ற நிலையில் இப்பகுதியை யாழ் பல்கலைக்கழகத்தின் வளாகமாக மாற்றுவதற்கும் முயற்சித்து வருகின்றார். மேலும் இங்கு புதிய பீடங்களையும் துறைகளையும் இயக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்கமைவாக விளையாட்டுத்துறையை இங்கு இயக்குவதற்கு சாத்தியமான சூழல் நிலவுவதனால் அதனை பொறுப்பேற்பதற்கு விவசாய பீடமும் தயாராக இருக்கின்றது. எனவே அத்துறை நிச்சயமாக இங்கு ஆரம்பமாகும். எனவும் தெரிவித்தார்

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் மேம்பாட்டில் மான்புமிகு ஜனாதிபதி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் ஆகியோர் மிகுந்த அக்கறை காட்டிவருகின்றனர். எனவே கிளிநொச்சி மாவட்டம் விரைவான மேம்பாட்டை எட்டும் என்பதில் ஐயமில்லை. கிளிநொச்சி அவ்வாறான மேம்பாட்டை எட்ட வேண்டியதும் அவசியமானது. ஏனெனில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதற்கு பொருத்தமற்றதாகவே யாழ் மாவட்டம் காணப்படுகின்றது. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்பு யாழ் மாவட்டத்தில் மிக அதிகளாவான சனத்தொகை குறைவடைந்துள்ளது. இல்லாது விடின் அங்கு சுமார் 11 இலட்சம் வரையான மக்கள் வாழ வேண்டிய நிலை உருவாகியிருக்கும். அவ்வாறு இருப்பின் அங்கு இன்றிருப்பதை விடவும் நீர்ப்பிரச்சினையும் மற்றும் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் மக்கள் முகம் கொடுக்க நேரிட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டதோடு யாழ். மாவட்ட மக்களும் இப்பகுதிகளில் வந்து குடியேறுவதற்கான காணிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு அனைவரும் துணைபுரியவேண்டும் எனவும் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.

0 Response to "கிளிநொச்சியில் பல்கலை வளாகம் டக்ளஸ் சாதனை"

Post a Comment