Latest Updates

Categories Post

சென்னை அருகே ஐ.டி. பெண் இன்ஜீனியர் உமா மகேஸ்வரி கொல்லப்பட்டது தொடர்பாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்த பெண் இன்ஜினீயர் உமா மகேஸ்வரி (23) கடந்த 13-ம் தேதி இரவு முதல் காணவில்லை. இதன் தொடர்ச்சியாக, அவரது உடல் அழுகிய நிலையில் சிப்காட் வளாகத்தில் உள்ள புதர் பகுதியில் 22-ம் தேதி மீட்கப்பட்டது. இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி ராமானுஜம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை 6 மணிக்கு சிறுசேரி சிப்காட் வளாகத்துக்கு சென்ற சிபிசிஐடி அதிகாரிகள், உமா மகேஸ்வரி உடல் கிடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் சுற்றளவில் கயிறு கட்டி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சிபிசிஐடி கண்காணிப்பாளர் நாகஜோதி தலைமையில் வந்த அதிகாரிகள் 30 பேர், அந்தப் பகுதி முழுவதும் தீவிரமாக ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.

பிரேத பரிசோதனையில் எடுக்கப்பட்ட உமா மகேஸ்வரியின் எலும்பு துண்டுகளும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. கழுத்தில் ஒரு இடத்திலும் வயிற்றில் 4 இடங்களிலும் கத்திக்குத்து விழுந்து உமா மகேஸ்வரி இறந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த நிலையில், உமா மகேஸ்வரியிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கிரெடிட் கார்டை வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 3 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பு கூறுவது: கடந்த 13-ம் தேதி இரவில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக நடந்து வந்த உமா மகேஸ்வரியிடம் கட்டிடத் தொழிலாளர்கள் 5 பேர் தவறாக நடந்துள்ளனர். அவரை பாலியல் பலாத்காரம் செய்து கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.

பின்னர், உமா மகேஸ்வரியிடம் இருந்து கிரெடிட் கார்டை கொள்ளையடித்த அவர்கள், அதை வைத்து கல்பாக்கத்தில் பொருட்களை வாங்கியுள்ளனர். அந்த கார்டின் எண்களைக் கண்காணித்து வந்த போலீஸார், உடனடியாக அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். அதில், உத்தம் என்கிற 23 வயது இளைஞரும், ராம் மண்டல் என்ற 23 இளைஞரும் பிடிப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மற்றொரு நபரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், இந்தக் கொலையில் தொடர்புடைய மற்ற இருவரைப் பிடிப்பதற்காக, 4 தனிப்படை காவல்துறையினர் உடனடியாக கொல்கத்தா விரைந்திருப்பதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.

0 Response to " சென்னை அருகே ஐ.டி. பெண் இன்ஜீனியர் உமா மகேஸ்வரி கொல்லப்பட்டது தொடர்பாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்."

Post a Comment